←அத்தியாயம் 77: நெடுமரம் சாய்ந்தது!

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: நண்பர்கள் பிரிவு

அத்தியாயம் 79: சாலையில் சந்திப்பு→

 

 

 

 

 


600பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: நண்பர்கள் பிரிவுகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 78[தொகு]
நண்பர்கள் பிரிவு


கொள்ளிடப் பெரு நதியின் படித்துறையை நெருங்கி நாலு குதிரைகள் வந்து கொண்டிருந்தன. நாலு குதிரைகள் மீதும் நாலு வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் தாம். பார்த்திபேந்திரன், கந்தமாறன், வந்தியத்தேவன், பொன்னியின் செல்வர் ஆகியவர்கள். 
இவர்களில் முதல் இருவரும் படகில் ஏறிக் கொள்ளிடத்தைக் கடந்து வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்ய ஆயத்தமாக வந்தனர். மற்ற இருவரும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவதற்கு வந்தார்கள். 
படகுத் துறையை அடைந்ததும் நண்பர்கள் நால்வரும் குதிரையிலிருந்து கீழே இறங்கினார்கள். 
"கந்தமாறா! உன் பழைய நண்பனிடம் உன் கோபமெல்லாம் போய் விட்டதல்லவா? இன்னமும் ஏதாவது மிச்சம் வைத்துக் கொண்டிருக்கிறாயா?" என்று பொன்னியின் செல்வர் கேட்டார்.
"ஐயா! அவன் மீது கோபம் வைத்துக் கொள்ளக் காரணம் என்ன இருக்கிறது? என் அறிவீனத்தை நினைத்து நினைத்துப் பச்சாதாபப்படுவதற்குத்தான் நிறைய காரணம் இருக்கிறது. நான் அவனுக்கு இழைத்த தீங்குகளையெல்லாம் மறந்து என்னிடம் பழையபடி சிநேகமாயிருக்க முன் வந்தானே, அந்தப் பெருந்தன்மைக்கு இணையே கிடையாது. என் சகோதரியை நதி வெள்ளத்தில் முழுகிச் சாகாமல் காப்பாற்றினானே, அதற்கு நான் இந்த ஜன்மத்திலே நன்றிக்கடன் செலுத்த முடியுமா? என் புத்தி எதனால் எப்படிக் கெட்டுப் போயிற்று என்பதை நினைத்துப் பார்த்தால், எனக்கே வியப்பாயிருக்கிறது. முதலில் உத்தேசித்தபடி மணிமேகலையை இவனுக்கு மணம் செய்து வைக்காமற் போனேனே? அப்படிச் செய்திருந்தால், இன்றைக்கு அவள் இவ்வாறு பிச்சியாகப் போயிருக்க மாட்டாள் அல்லவா?" என்றான் கந்தமாறன். 
"அது ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? நதி வெள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியினால் சிறிது நினைவுத் தவறு ஏற்பட்டிருக்கிறது. சில நாள் போனால் சரியாகி விடாதா?" என்றார் இளவரசர். 
"சாதாரண நினைவுத் தவறுதலாகத் தோன்றவில்லை. மற்ற எல்லாரையும் அவளுக்கு ஞாபகமிருக்கிறது. எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கின்றன. என்னையும், வந்தியத்தேவனையும் மட்டும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. என்னிடம் அவள் வைத்திருந்த அன்பு எத்தகையது என்பதை எண்ணும்போது என் நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது. 'ஐயோ! என் அருமை அண்ணனை என்னுடைய கையினாலேயே கொன்று விட்டேனே!' என்று அவள் ஓலமிடும் குரல் என் காதிலேயே இருந்து கொண்டிருக்கிறது..." 
"அது ஏன் அப்படி அவள் ஓலமிடவேண்டும்? நீதான் உயிரோடு இருந்து வருகிறாயே?" 
"நான் உயிரோடுதானிருக்கிறேன்! இறந்து போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆம், ஐயா! வந்தியத்தேவனை நான் கொன்று விட்டதாகவும், அதற்காக என்னை அவள் கொன்று விட்டதாகவும் அவள் உறுதி கொண்டிருக்கிறாள். ஒரு சமயம் என்னை நினைத்துப் புலம்புகிறாள். இன்னொரு சமயம் என் சிநேகிதனை நினைத்துக்கொண்டு 'ஆற்று வெள்ளம் திரும்பி வருமா? இறந்து போனவர்களைக் கொண்டு தருமா?' என்று புலம்புகிறாள். எவ்வளவுதான் சொன்னாலும், என்னை அவளுடைய அண்ணன் என்றும் ஒப்புக்கொள்வதில்லை. வந்தியத்தேவனையும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை. 'நீ யார்; வல்லத்து இளவரசரை நீ பார்த்தது உண்டா?' என்று இவனிடமே கேட்கிறாள்!..." 
"அப்படியா?" என்று பொன்னியின் செல்வர் திரும்பிப் பார்த்தபோது, வந்தியத்தேவன் கண்களில் கண்ணீர் ததும்புவதைக் கண்டார். 
"அடாடா! இப்போது வந்தியத்தேவர் வல்லத்து இளவரசரல்ல, வல்லத்து அரசராகவே ஆகிவிட்டார் என்று தெரிந்தால் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? அதற்குக் கொடுத்து வைக்காமல் போய்விட்டதே?" என்றான் பார்த்திபேந்திரன். 
இதைக் கேட்ட கந்தமாறன் முகத்தில் வியப்புக் குறியுடன் பொன்னியின் செல்வரை நோக்கினான். 
"ஆம், அப்பா! உன் நண்பனுக்கு வாணகப்பாடி நாட்டைத் திரும்பக் கொடுத்து வல்லத்து அரசனாக்கிவிடுவதென்று சக்கரவர்த்தி தீர்மானித்திருக்கிறார். அம்மாதிரியே உனக்கும் வாணகப்பாடிக்கு அருகில் வைதும்பராயர்கள் ஆண்ட பகுதியைத் தனி இராஜ்யமாக்கி அளிக்க எண்ணியிருக்கிறார். இனி, நீங்கள் இருவரும் அக்கம் பக்கத்திலேயே இருந்து வாழ வேண்டியவர்கள். எப்பொழுதும் உங்கள் சிநேகத்துக்குப் பங்கம் நேராதபடி நடந்து கொள்ள வேண்டும்" என்றார் பொன்னியின் செல்வர். 
"சக்கரவர்த்தியின் கருணைக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது. அப்படியானால், நான் மறுபடி கடம்பூருக்கே போகவேண்டியதில்லை அல்லவா?" என்று கந்தமாறன் சிறிது உற்சாகத்துடன் கேட்டான். 
"வேண்டியதில்லை, அங்கே உங்களுடைய பழைய அரண்மனைதான் அநேகமாக எரிந்து போய்விட்டதே? மறுபடியும் அவ்விடத்துக்கு நீங்கள் போனால் பழைய ஞாபகங்கள் வந்துகொண்டேயிருக்கும். பாலாற்றின் தென் கரையிலே புதிய அரண்மனை கட்டிக்கொள்ளுங்கள். உன் சகோதரிக்கு உடம்பு சௌகரியமானதும், அங்கே வந்து அவளும் இருக்கலாம்." 
"கோமகனே! இனி மணிமேகலை எங்களுடன் வந்து இருப்பாள் என்று நான் கருதவில்லை. தங்கள் பாட்டியார் செம்பியன்மாதேவியார் அவளைத் தம்முடன் ஸ்தல யாத்திரைக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார். மணிமேகலைக்கும் பெரிய பிராட்டியை ரொம்பவும் பிடித்துப் போயிருக்கிறது. இன்றைக்குக் கூடப் பெரிய பிராட்டி திருவையாற்றுக்கு என் சகோதரியை அழைத்துப் போயிருக்கிறார்." 
"ஆமாம்; பெரிய கோஷ்டியாகத்தான் போயிருக்கிறார்கள். புதுமணம் புரிந்துகொண்ட என் சித்தப்பாவும் சிற்றன்னையும் கூடப் போயிருக்கிறார்கள். இந்த வேடிக்கையைக் கேளுங்கள். சமுத்திர குமாரியை இனிமேல் என் சிற்றன்னையாக நான் கருதி வர வேண்டும்!" 
"சோழர் குலத்தில் இவ்வளவு அடக்கமாக ஒரு திருமணம் இதுவரையில் நடந்ததே கிடையாது, மதுராந்தகருக்கும் பூங்குழலிக்கும் நடந்த திருமணத்தைப்போல்!" என்றான் பார்த்திபேந்திரன். 
"என்னுடைய மகுடாபிஷேகம் கூட அவ்வளவு அடக்கமாகத்தான் நடக்கப்போகிறது!" என்றார் அருள்மொழி. 
"அது ஒரு நாளும் நடவாத காரியம்!..." என்றான் வந்தியத்தேவன். 
பொன்னியின் செல்வர் திடுக்கிட்டது போல் நடிப்புடன், "எது நடவாது என்று கூறுகிறாய்? என்னுடைய பட்டாபிஷேகமா?" என்றார். 
வந்தியத்தேவன் சிறிது வெட்கத்துடன், "இல்லை, ஐயா! அடக்கமாக நடப்பது இயலாத காரியம் என்றேன். இப்போதே மக்கள் தங்கள் மகுடாபிஷேகத்தைப் பற்றி விசாரிக்கவும், பேசவும் ஆரம்பித்து விட்டார்கள்!" என்றான். 
"கோமகனே! தங்களுடைய முடிசூட்டு விழாவுக்கு நாங்கள் இருக்க வேண்டாமா? இந்தச் சமயம் பார்த்து எங்களை வடதிசைக்கு அனுப்புகிறீர்களே, தை மாதம் பிறந்ததும் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்படும் என்று தஞ்சையில் பேசிக் கொண்டிருந்தார்களே! வந்தியத்தேவன் கொடுத்து வைத்தவன்; அதிர்ஷ்டசாலி.." என்றான் கந்தமாறன். 
"அப்படி எல்லாம் ஒன்றுமில்லை வந்தியத்தேவரையும் நான் சீக்கிரத்தில் ஈழத்துக்கு அனுப்பப் போகிறேன். நண்பர்களே! ஒன்று நிச்சயமாக நம்புங்கள்! என் அருமை நண்பர்களாகிய நீங்கள் இல்லாமல் என் மகுடாபிஷேகம் நடைபெறாது!" என்று பொன்னியின் செல்வர் திடமாகக் கூறினார். 
"மிக்க நன்றி, ஐயா! மகுடாபிஷேகத்துக்கு நாள் குறிப்பிட்டவுடனே குதிரை ஆட்களிடம் ஓலை கொடுத்து அனுப்புங்கள், உடனே வந்து சேருகிறோம்" என்றான் கந்தமாறன். 
"நண்பா! அதைப்பற்றி என்ன கவலை? நீங்கள் வராமல் நான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதில்லை. இதை நிச்சயமாக நம்புங்கள். நான் பட்டாபிஷேகம் செய்து கொள்வது எதற்காக என்பதை மறந்து விடாதீர்கள். அரண்மனை நிலா மாடங்களிலும் உத்தியான வனங்களிலும் உல்லாசப் பொழுது போக்குவதற்காக நான் முடிசூட்டிக் கொள்ளப் போவதில்லை. நண்பர்களே! ஈழ நாடு சென்றதிலிருந்து நான் கண்டு வரும் கற்பனைக் கனவுகளை உங்களிடம் முன்னமே சொல்லியிருக்கிறேன். இன்னும் ஒரு முறை சொல்லுகிறேன் கேளுங்கள்! என் பாட்டனாரின் தந்தையான பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் அடைந்திருந்த மகோந்நதத்தைக் காட்டிலும் நம்முடைய காலத்தில் அதிக மேன்மையை அடைய வேண்டும். நாலா புறத்திலும் இராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும். வடக்கே கங்கை நதிக்கரை வரைக்கும், கிழக்கே கடல் கடந்து ஸ்ரீவிஜய ராஜ்யம் வரைக்கும், சோழ நாட்டுப் படைகள் சென்று புலிக் கொடியை நாட்ட வேண்டும். மேற்கே மலை நாட்டையும் அப்பால் கடலில் உள்ள லட்சத்தீவுகளையும் கைப்பற்றி, நமது படைகளையும் அங்கே நிலைத்து இருக்கச் செய்யவேண்டும். மலை நாட்டில் 'சேர அரசன்' ஒருவன் எங்கிருந்தோ கிளம்பியிருக்கிறான். பாண்டி நாட்டிலும் யாராவது ஒரு பாண்டியன் திடீரென்று கிளம்புவான். இந்தப் புதிய சேர, பாண்டியர்களுக்குப் பலம் அளிப்பவர்கள் இலங்கை மன்னர்கள். ஆகையால் ஈழ நாட்டு மலைக் குகைகளில் ஒளிந்திருக்கும் மகிந்தனையும் அவனுடைய படைகளையும் தேடிப் பிடித்து அவர்களுடைய பலத்தை அடியோடு அழித்து விடவேண்டும். இலங்கைத் தீவு முழுவதையும் நம் ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இராஜ்யம் விஸ்தாரமானால் மட்டும் போதுமா? ஈழ நாட்டிலுள்ள புத்தரின் ஸ்தூபங்களைத் தோற்கடிக்கும்படியான பெரிய பெரிய சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் இந்தப் புண்ணிய பூமியில் எழுப்ப வேண்டும். இந்த வீரத் திருநாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரப்போகிறவர்கள் நாம் நம் காலத்தில் செய்த திருப்பணிகளை கண்டு பிரமிக்க வேண்டும். நண்பர்களே! இக்கனவுகள் எல்லாம் என் காலத்தில் நிறைவேறத்தான் போகின்றன. நிறைவேற்றியே தீருவேன். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி செய்ய வேண்டும். பார்த்திபேந்திரரே! சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த சைன்யப் பதவியை, என் தமையனார் கரிகாலர் வகித்து வந்த வடதிசை மாதண்டநாயகர் பதவியைத் தங்களுக்கு அளித்திருக்கிறேன். அந்தப் பொறுப்பை நீர் சரிவர நிறைவேற்ற வேண்டும். என் தமையனாரின் அகால மரணம் நம் பகைவர்களிடையே பலவித ஆசைகளை மூட்டிவிட்டிருக்கும். வேங்கி அரசனும் இராட்டிரகூட மன்னனும் சோழ நாட்டில் உள் குழப்பங்கள் நேரிடும் என்றும், சிற்றரசர்களுக்குள்ளே போர் மூளும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் வட பெண்ணைக் கரையில் நம் வீரர்கள் இரும்பு அரணைப்போல் நின்று காவல் புரிய வேண்டும். பல்லவர் குலத்தோன்றலே! கந்தமாறனை, அங்கே தளபதியாக நிறுத்தி வைத்து விட்டு, தாங்கள் உடனே காஞ்சிக்குத் திரும்புங்கள். அங்கே, என் வீரச் சகோதரர் எடுபித்த பொன் மாளிகையைச் சக்கரவர்த்தி வந்து தங்குவதற்கு உகந்ததாகச் செய்து வையுங்கள். என்னுடைய தலையில் கிரீடத்தை வைத்தவுடனே சக்கரவர்த்தி காஞ்சிக்குப் பிரயாணமாவதற்கு விரும்புகிறார்!" 
இதைக் கேட்டுக் கந்தமாறன் கண்களில் நீர் ததும்ப, 'கோமகனே! போர்க்களத்தில் நான் எனது போர்த் திறமையை இன்னும் நிரூபித்துக் காட்டவில்லையே? எல்லைக் காவல் படைக்கு என்னைத் தளபதியாக நியமிக்கிறீர்களே? நான் தகுதியுள்ளவனா?" என்று நாத்தழுதழுக்கக் கேட்டான். 
"நண்பா! எல்லாம் வல்ல இறைவன் எனக்குச் சில சக்திகளை அளித்திருக்கிறார். யார் யார், எந்தப் பணிக்குத் தகுதியுள்ளவர் என்பதை எளிதில் கண்டுபிடிக்கும் சக்தியையும் அளித்திருக்கிறார். உன்னை வடக்கு எல்லைப் படைக்குத் தளபதியாக நியமித்திருப்பது போல், உன் நண்பர் வல்லத்தரசரை ஈழப் படைக்குத் தளபதியாக நியமித்திருக்கிறேன்! இரண்டு பேரும் உங்கள் கடமைகளை நன்கு நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார் பொன்னியின் செல்வர். 
"இன்னும் சில காலத்துக்கு இவர்களில் ஒருவரை வடக்கு எல்லையிலும், இன்னொருவரைத் தெற்கு எல்லையிலும் வைத்திருப்பது நல்ல யோசனைதான். எங்கேயாவது சேர்ந்திருந்தால், தாங்களும் அங்கே இல்லாமலிருந்தால், பழைய ஞாபகம் வந்து இருவரும் மோதிக் கொண்டாலும் மோதிக் கொள்வார்கள்" என்றான் பார்த்திபேந்திரன். 
"ஐயா! இனி அம்மாதிரி ஒரு நாளும் நேரவே நேராது!" என்று கந்தமாறன் சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் அருகில் சென்றான்.
"நண்பா! என்னுடைய தவறுகளை எல்லாம் மன்னித்து விட்டாய் அல்லவா?" என்று கேட்டான். 
வந்தியத்தேவன் அதற்கு வாயினால் மறுமொழி கூறாமல் இரு கரங்களையும் நீட்டிக் கந்தமாறனை மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டான். 
நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் மௌனமாகக் கண்ணீர் உகுத்தார்கள். 
பின்னர், பார்த்திபேந்திரனும், கந்தமாறனும், சென்று ஆயத்தமாக இருந்த படகில் ஏறிக்கொண்டார்கள். 
படகு நதியில் பாதி தூரம் போகும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும் தஞ்சையை நோக்கிக் குதிரைகளைத் திருப்பினார்கள்.

 

 

 

Comments
அனித்தா முத்துகுமார்

very easy to read and use the app.

हमारे टेलिग्राम ग्रुप से जुड़े। यहाँ आप अन्य रचनाकरों से मिल सकते है। telegram channel

Books related to பொன்னியின் செல்வன்


संत तुकाराम अभंग - संग्रह २
चंद्रकांता
रामचरितमानस
भारताचा शोध
वाचनस्तु
The Voyages and Adventures of Captain Hatteras
श्रीनारदपुराण - पूर्वभाग