←அத்தியாயம் 2: பாட்டனும், பேரனும்
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திமணிமகுடம்: பருந்தும், புறாவும்
அத்தியாயம் 4: ஐயனார் கோவில்→
451பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: பருந்தும், புறாவும்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
மணிமகுடம் - அத்தியாயம் 3[தொகு]
பருந்தும், புறாவும்
ஆதித்த கரிகாலன் சுட்டிக்காடிய திசையில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்று இருந்தது. அது கல் வேலையினால் ஆன மண்டபம். வழிப்போக்கர்கள் வெய்யிலிலும் மழையிலும் தங்குவதற்காக யாரோ தர்மவான் அதைக் கட்டியிருக்க வேண்டும். அந்த மண்டபம் வெய்யிலிலும் மழையிலும் வெகு காலம் அடிப்பட்டு முதுமையின் அறிகுறிகளை காட்டிக் கொண்டிருந்தது. மண்டபத்தின் முனைகளில் சிற்ப வேலைப்பாடு உடைய உருவங்கள் சில காணப்பட்டன. அவை இன்னவை என்று கிழவராகிய மலையமானுக்குத் தெரியவில்லை.
"பார்த்தீர்களா, தாத்தா!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"குழந்தாய்! அந்த மண்டபத்தைத்தானே சொல்லுகிறாய்? அதில் வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே? மண்டபமும் வெறுமையாகத்தான் இருக்கிறது, அதில் யாரும் இருப்பதாகக் காணவில்லையே!" என்றார்.
"தாத்தா! உங்களுக்கு வயதாகிவிட்டது என்று இப்போது தான் எனக்கு நன்றாய்த் தெரிகிறது. அதனால் கண் பார்வை குன்றியிருக்கிறது. அதோ பாருங்கள்! ஒரு பெரிய இராஜாளி! எத்தனை பெரியது? அதன் சிறகுகள் எவ்வளவு விசாலம்? கொடுமை! கொடுமை! அது தன் கால்களில் ஒரு சின்னஞ்சிறு புறாவைப் பிடித்துக் கொண்டிருக்கிறதே; தெரியவில்லையா? இராஜாளியின் கூரிய நகங்கள் கிழித்துப் புறாவின் இரத்தம் சிந்துகிறதே, தெரியவில்லையா? கடவுளே, இது என்ன விந்தை! அதோ இன்னொரு புறாவைப் பாருங்கள், தாத்தா! அந்தப் பயங்கரமான இராஜாளியின் அருகில் வட்டமிடுகிறது! அது இராஜாளியிடம் எப்படிக் கெஞ்சுகிறது? இராஜாளியின் கால்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் புறா அதனுடைய காதலனாக இருக்க வேண்டும்! காதலனுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும்படி அது கெஞ்சுகிறது! தாத்தா! அந்தப் புறா கெஞ்சுகிறதா? அல்லது இராஜாளியிடம் சண்டைக்குப் போகிறதா? இறகை அடித்துக் கொள்வதைப் பார்த்தால் சண்டைக்குப் போவதாகவே தோன்றுகிறது. கடவுளே! அந்தப் பெண் புறாவுக்கு என்ன தைரியம் பாருங்கள்! இராஜாளியுடன் சண்டைக்குப் போகிறது! காதலனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பயங்கர ராட்சதனுடன் போராடப் போகிறது! தாத்தா! இராஜாளி மனம் இரங்கும் என்று நினைக்கிறீர்களா? இரங்காது! இரங்காது! ஒருநாளும் இரங்காது! இம்மாதிரி எத்தனையோ புறாக்களை அது கொன்று தின்று கொழுத்துக் கிடக்கிறது! சண்டாள இராஜாளியே! இதோ உன்னைக் கொன்று போடுகிறேன்!" என்று கூறிக் கொண்டே ஆதித்த கரிகாலன் பக்கத்தில் கிடந்த ஒரு கூழாங்கல்லை எடுத்து வீசி எறிந்தான். அந்தக் கூழாங்கல் மண்டபத்தை நோக்கிச் சென்று அதன் ஒரு முனையில் பட்டுவிட்டுக் கீழே விழுந்தது.
ஆதித்த கரிகாலன், "ராட்சதனே! உனக்கு நன்றாய் வேண்டும்!" என்று சொல்லிவிட்டு, இடி இடி என்று பயங்கரமாகச் சிரித்தான்.
பேரப் பிள்ளையின் சித்த சுவாதீனத்தைப் பற்றி ஏற்கனவே கிழவருக்குச் சிறிது சந்தேகம் இருந்தது. அது இப்போது இன்னும் அதிகமாயிற்று.
"தாத்தா! ஏன் என்னை இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்? மண்டபத்தின் அருகில் போய்ப் பாருங்கள்" என்றான் கரிகாலன்.
அவ்விதமே மலையமான் மண்டபத்தைச் சற்று நெருங்கிச் சென்று கரிகாலனின் கல் விழுந்த இடத்தை உற்றுப் பார்த்தார். அங்கே ஒரு சிற்பம் காணப்பட்டது. அந்தச் சிற்பத்தில் இராஜாளி ஒன்று தன் கால் நகங்களில் ஒரு புறாவைக் கொத்தித் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், இன்னொரு புறா அந்த இராஜாளியுடன் பாயப் போவது போலவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
மலையமான் திரும்பி வந்து, "குழந்தாய்! எனக்கு வயதாகி விட்டது என்பது உண்மைதான்! கண் பார்வை முன் போல் துல்லியமாக இல்லை. அருகில் சென்று உற்றுப் பார்த்த பிறகு தான் தெரிந்தது நல்ல சிற்ப வேலை!" என்றார்.
"நல்ல சிற்ப வேலையா? சிற்ப அற்புதம் என்று சொல்லுங்கள் தாத்தா! மகேந்திரவர்மர் - மாமல்லர் காலத்துச் சிற்ப சக்கரவர்த்தி யாரோ ஒருவன் இதையும் செய்திருக்க வேண்டும். முதலில் பார்த்ததும் உண்மையாகவே நடப்பது போலவே எனக்குத் தோன்றிவிட்டது!" என்றான் கரிகாலன்.
"ஆதித்தா! அற்புதம் அந்தக் கல்லிலே மட்டும் இல்லை! உன் கண்ணிலும் இருக்கிறது; உன் மனத்திற்குள்ளேயும் இருக்கிறது. இந்த வழியாக எவ்வளவோ பிரயாணிகள் தினந்தோறும் போகிறார்கள். அவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்தச் சிற்ப அற்புதத்தைக் கவனித்துக் கூட இருக்க மாட்டார்கள். மற்றும் பலர் பார்த்தும் பார்க்காதது போலவே போய்விடுவார்கள். உன்னைப் போல் ஒரு சிலர் தான் ஒரு சிற்பத்தைப் பார்த்து இவ்வளவு ஆச்சரியப்படுவார்கள்!..."
"நான் ஆச்சரியப்படவில்லை, தாத்தா! கோபப்படுகிறேன். அந்த சிற்பத்தை இப்போதே இடித்துத் தள்ளிவிட வேண்டுமென்று எனக்கு ஆத்திரம் உண்டாகிறது. இவ்வளவு கொடூரமான சிற்பத்தை அமைத்தவனை அதிகமாகப் புகழ்ந்து பாராட்டுவது கூட எனக்குப் பிடிக்கவில்லை!"
"கரிகாலா! இது என்ன விந்தை? உன்னுடைய வைர நெஞ்சு எப்போது இவ்வளவு இளக்கம் கொடுத்தது? இராஜாளி புறாவைக் கொன்று தின்பது அதனுடைய இயற்கை. சிங்கராஜா ஆட்டினிடம் இரக்கம் கொள்ள ஆரம்பித்தால் அது சிங்கராஜா அல்ல; அதுவும் ஆடாகத்தான் போய்விடும். சிம்மாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிய ஆசைப்படுகிறவர்கள் பகைவர்களையும் சதிகாரர்களையும் கொன்றுதான் ஆக வேண்டும். சக்கரவர்த்தியாயிருந்து உலகை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவர்கள் பகையரசர்களைக் கொன்றுதான் தீரவேண்டும். இராஜாளி புறாவைக் கொல்லாவிட்டால், அது இராஜாளியாயிருக்க முடியுமா? இதைப் பற்றி ஏன் உனக்கு இவ்வளவு கலக்கம்?" என்றார் மலையமான்.
"தாத்தா! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் அந்தப் பெண் புறா அப்படித் தவிப்பதைப் பார்த்த பிறகு இராஜாளிக்கு இரக்கம் வர வேண்டாமா? பெண்ணுக்கு இரங்கி ஆணை விடுதலை செய்ய வேண்டாமா? ஐயா! நீங்களே சொல்லுங்கள், உங்கள் பகைவன் ஒருவனை நீங்கள் கொல்லப் போகும் சமயத்தில் அவனுடைய காதலி குறுக்கே வந்து புருஷனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டால் என்ன செய்வீர்கள்? அப்போது உங்கள் மனம் இரங்காமலிருக்குமா..?" என்று கரிகாலன் கேட்டான்.
"அப்படி ஒரு பெண் குறுக்கே வந்தால் அவளை என் இடதி காலினால் உதைத்துவிட்டு என் பகைவனைக் கொல்லுவேன். கரிகாலா! அதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. பகைவர்கள் 'தொழுத கையினில்' ஆயுதம் வைத்திருப்பார்கள் என்றும், அவர்கள் 'அழுத கண்ணீரிலும்' ஆயுதம் மறைந்திருக்கும் என்றும் வள்ளுவர் கூறியிருக்கிறார். ஆண்களின் கண்ணீரைக் காட்டிலும் பெண்களின் கண்ணீர் அபாயமானது. ஏனெனில், பெண்களின் கண்ணீருக்கு இளகச் செய்யும் சக்தி அதிகம் உண்டு. அப்படி மனத்தை இளகவிட்டு விடுகிறவனால் இவ்வுலகில் பெரிய காரியம் எதையும் செய்ய முடியாது அவன் பெண்களிலும் கேடு கெட்டவனாவான்!"
"தாத்தா! இது என்ன? பெண்களைப் பற்றி ஏன் நீங்கள் இவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்கள்? பெண்களைப் பற்றிக் குறைவாய்ப் பேசுவது என் தாயாரையும் குறைவுபடுத்துவதாகாதா?"
"குழந்தாய்! கேள்! உன் தாயாரிடம் நான் வைத்திருந்த அன்புக்கு இந்த உலகத்தில் இணை ஒன்றுமே இல்லை. எனக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். பீமனையும், அர்ச்சுனனையும் ஒத்த வீரர்களாய் வளர்ந்தார்கள். அவ்வளவு பேரையும் யுத்தகளத்தில் பலி கொடுத்துவிட்டேன். அவர்கள் இறந்த செய்தி வந்தபோதெல்லாம் நான் வருத்தப்படவில்லை. ஆனால் உன் தாயாரை மணம் செய்து கொடுத்து அனுப்பி வைத்தபோது அவள் சாம்ராஜ்ய சிங்காதனத்தில் அமரப் போகிறாள் என்று தெரிந்திருந்தும் என் மனம் அடைந்த வேதனையைச் சொல்லி முடியாது. ஆனால் அந்த வேதனையை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டேனா? இல்லை! அவளிடந்தான் வெளியிட்டேனா? அதுவும் இல்லை. உன் தாயை மணம் செய்து கொடுப்பதற்கு முதல் நாள் அவளைத் தனியாக அழைத்து என்ன சொன்னேன்? கேள், கரிகாலா! 'மகளே! மாநிலம் புரக்கப் போகும் மன்னனை நீ மணந்து கொள்ளப் போகிறாய்! அதற்காகவும் நீ கர்வம் அடையாதே! அவ்வளவு புகழ் வாய்ந்த கணவனை மணந்து கொள்வதினால் உனக்குக் கஷ்டந்தான் அதிகமாயிருக்கும். உன் அரண்மனையில் பணி செய்யும் பணிப் பெண்கள் பலரும் உன்னைக் காட்டிலும் சந்தோஷமாயிருப்பார்கள். துக்கப்படுவதற்கும் வேதனைப்படுவதற்கும் உன்னை நீ ஆயத்தம் செய்து கொள். உனக்குக் குழந்தைகள் பிறக்காவிட்டால் உன் புருஷன் வேறு ஸ்திரீகளை கட்டாயம் மணந்து கொள்வான். அதை நினைத்து நீ வேதனைப்படக் கூடாது. உனக்கு மக்கள் பிறந்தால் அவர்களை வீர மக்களாய் நீ வளர்க்க வேண்டும். அவர்கள் போர்க்களத்தில் உயிர் விட்டதாகச் செய்தி வந்தால் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடக்கூடாது. உன் கணவன் சந்தோஷமாயிருந்தால் நீயும் சந்தோஷமாயிரு! உன் புருஷன் துக்கப்பட்டால் நீ அவனைச் சந்தோஷப்படுத்தப் பார்! உன் பதி நோய்ப்பட்டால் நீ அவனுக்குப் பணிவிடை செய்! உன் கணவன் இறந்தால் நீயும் உடன்கட்டை ஏறிவிடு! உன் நெஞ்சில் உதிரம் கொட்டினாலும் உன் கண்களில் மட்டும் கண்ணீர் சொட்டக் கூடாது! மலையமான் வம்சத்தில் பெண்களுடைய குலாச்சாரம் இது!' என்று இவ்விதம் உன் அன்னைக்குப் புத்திமதி கூறினேன். அம்மாதிரியே உன் அன்னை இன்று வரை நடந்து வருகிறாள்; நடத்தி வருகிறாள். கரிகாலா! உன்னையும் உன் சகோதரனையும் இணையில்லாத வீரர்களாக வளர்த்து வந்திருக்கிறாள். உன் தந்தை நோய்ப்பட்ட பின்னர் இரவு பகல் அவர் பக்கத்திலிருந்து அவளே எல்லாப் பணிவிடைகளையும் செய்து வருகிறாள். உன் அன்னையை என் மகளாகப் பெற்றதை நினைக்கும்போதெல்லாம் என் தோள்கள் பூரிக்கின்றன!" என்றார் மலையமான்.
"தாத்தா! என் தாயை நினைக்கும்போதெல்லாம் நான் அடையும் பெருமிதத்துக்கும் அளவில்லை. ஆனால் ஒன்று கேட்கிறேன் சொல்லுங்கள்! என் தந்தையின் கொடிய பகைவன் ஒருவன் அவரைக் கொல்லுவதற்குக் கத்தியை ஓங்கிக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். என் தாயார் அப்பொழுது என்ன செய்வாள்? முன்னால் நின்று கண்ணீர் பெருக்கிக் கணவனைக் காப்பாற்றும்படி அப்பகைவனை வேண்டிக் கொள்வாளா? முக்கியமாக, அப்படி வருகிற பகைவன் என் அன்னைக்குத் தெரிந்தவனாகவும் இருந்து விட்டால்..."
"குழந்தாய்! உன் தாயார் ஒரு நாளும் அப்படிப் பகைவனிடம் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டாள். மலையமான் மகள் அவ்விதம் ஒருகாலும் தான் பிறந்த குலத்தையும், புகுந்த குலத்தையும் அவமானப்படுத்தமாட்டாள். அவளுடைய புருஷனுடைய பகைவனைத் தனக்கும் கொடிய பகைவனாகவே கருதுவாள். பகைவன் முன்னால் கைகூப்பமாட்டாள்; கண்ணீரும் விடமாட்டாள், கணவன் உயிர் துறந்தால் உடனே அவன் மீது விழுந்து தானும் உயிரை விடுவாள்! அல்லது மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு உயிரோடிருப்பாள்; பகைவனைப் பழிக்குப் பழி வாங்குவதற்காக மட்டுமே உயிரை வைத்துக் கொண்டிருப்பாள்!"
இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு, "தாத்தா! நான் போய் வரவா?" என்றான்.
"அவசியம் போகத்தான் வேண்டுமா?"
"அதைப்பற்றி இன்னும் என்ன சந்தேகம், தாத்தா! பாதி வழிக்கு மேலே வந்தாகிவிட்டதே?"
"ஆம், பாதி வழிக்கு மேல் வந்தாகிவிட்டது நானும் முதலில் உன்னைப் போக வேண்டாம் என்றேன்; அப்புறம் போகும்படி சொன்னேன். உன் தம்பியைப் பற்றிய செய்தி கேட்ட பிறகு நீ போவதே நல்லது என்று தீர்மானித்தேன். அருள்மொழிவர்மன் இறந்திருப்பான் என்று நான் நம்பவில்லை..."
"நானும் நம்பவில்லை..."
"உன் தந்தையின் இளம் பிராயத்தில் சில காலம் அவர் இருக்குமிடம் தெரியாமலிருந்தது. அதுபோல் அருள்மொழியும் ஏதேனும் ஒரு தீவில் ஒதுங்கியிருப்பான். சில நாளைக்கெல்லாம் வந்து சேர்வான் என்றே நம்புகிறேன்! ஆனாலும் அச்செய்தி சோழ நாடெங்கும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது என்று அறிகிறேன். உன் பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். இச்சமயம் அவர்கள் பக்கத்தில் இருந்து நீ ஆறுதல் சொல்லுவது அவசியம். அப்படிப் போகும்போது பழுவேட்டரையர்களின் விரோதியாகப் போவதைக் காட்டிலும், சிநேகமாய்ப் போவது நல்லது. ஆகையினால்தான் நீ சம்புவரையர் அழைப்புக்கு இணங்கிப் போவதற்குச் சம்மதித்தேன். அவன் வேண்டுமென்றே என்னை அழைக்கவில்லை அழைத்திருந்தால் நானும் வந்திருப்பேன்.
"தாத்தா! எனக்காக அவ்வளவு தூரம் நீங்கள் பயப்படுகிறீர்களா? என்னை அவ்வளவு கையினாலாகாதவன் என்று எண்ணி விட்டீர்களா?" என்று கேட்டான் கரிகாலன்.
"இல்லை, தம்பி! இல்லை! நீ எத்தகைய வீராதி வீரன் என்பது எனக்குத் தெரியாதா? கொடிய ஆயுதங்களைத் தரித்த பதினாயிரம் பகைவர்களின் நடுவில் நான் உன்னைத் தன்னந்தனியாக நம்பி அனுப்புவேன். ஆனால் கண்ணீர் பெருக்கி உன் மனத்தைக் கலங்கச் செய்யக் கூடிய ஒரு பெண்ணின் முன்னால் உன்னைத் தனியாக அனுப்புவதற்கு மட்டும் பயப்படுகிறேன்."
"சம்புவரையர் மகள் அப்படியெல்லாம் ஜாலவித்தையில் தேர்ந்தவள் என்று நான் கேள்விப்படவில்லை, தாத்தா! ஆண் மக்கள் முன்னால் வருவதற்கே அஞ்சக்கூடிய பெண்ணாம் அவள்; கந்தமாறன் சொல்லியிருக்கிறான். நானும் அப்படியெல்லாம் அவசரப்பட்டுத் தாய் தந்தையர் சம்மதம் இல்லாமல் ஒரு காரியத்தை செய்துவிடமாட்டேன். உங்களுடைய பழங்குடியில் பிறந்த இரண்டு பெண்கள் இன்னும் மணமாகாமல் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.."
"ஆதித்தா, அதைப் பற்றிச் சிந்தனையே எனக்கு இல்லை. என் முத்த மகனுடைய பெண்கள் இரண்டு பேர் திருமணப் பிராயம் வந்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களை உன் கழுத்தில் கட்டும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. ஏற்கெனவே சோழ நாட்டுச் சிற்றரசர்கள் பலரும் என் மீது பொறாமையும், பகைமையும் கொண்டிருக்கிறார்கள். இதுவும் வேறு சேர்ந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாகச் சம்புவரையர் மகளையே நீ கட்டிக் கொண்டால் நான் ஒருவாறு திருப்தி அடைவேன். எனக்கோ வயது அதிகமாகி விட்டது; உடல் தளர்ந்து விட்டது. சில சமயம் உள்ளமும் நெகிழ்ந்துவிடுகிறது. மறுபடியும் என் அருமைப் பேரனைக் காணமாட்டேனோ, இதுதான் உன்னை நான் பார்ப்பது கடைசி முறையோ என்றெல்லாம் சில சமயம் எண்ணிக் கொள்கிறேன். இனிமேல் என்னால் உனக்கு உதவி எதுவும் இல்லை. புதிய சிநேகிதர்கள் சிலர் உனக்கு அவசியம் வேண்டும். உன் விஷயத்தில் சிரத்தை கொள்ளக் கூடியவர்கள் வேண்டும். ஆகையால் சம்புவரையர் மகளை நீ மணந்து கொண்டால் நான் உண்மையில் மகிழ்ச்சியே அடைவேன்."
"தாத்தா! உங்கள் மகிழ்ச்சிக்காகக் கூட அதை நான் செய்ய முடியாது. சம்புவரையர் மாளிகைக்கு நான் விருந்தாளியாகப் போவது அவருடைய சிநேகத்தை விரும்பியும் அல்ல; அவர் மகளை மணம் புரியவும் அல்ல. நீங்கள் அதுபற்றி நிம்மதியாயிருக்கலாம்."
"அப்படியானால் எதற்காகப் போகிறாய், குழந்தாய்! என்னிடம் உண்மையைச் சொல்லக் கூடாதா? உன்னுடைய நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் சில வார்த்தைகள் அவ்வப்போது என் காதில் விழுந்தன. பெரிய பழுவேட்டரையன் அறுபது வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொண்டானே, அந்த மோகினிப் பிசாசு உனக்கு ஓலை அனுப்பியிருக்கிறாள் என்றும், அதனாலேதான் நீ கடம்பூர் வரச் சம்மதித்தாய் என்றும் அவர்கள் பேசிக் கொண்டார்கள் அது உண்மையா?"
"ஆம் தாத்தா! அது உண்மைதான்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"கடவுளே! இது என்ன காலம்? கரிகாலா! நான் சொல்வதைக் கேள். நீ பிறந்த சோழ குலம் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழையடி வாழையாக வந்த பெருமை பெற்ற குலம். உன்னுடாய மூதாதைகள் சிலர் உலகத்தை ஒரு குடையில் ஆண்ட சக்கரவர்த்திகளாயிருந்திருக்கிறார்கள். சில சமயம் உறையூரையும் அதன் சுற்றுப்புறத்தையும் மட்டும் ஆண்ட குறுநில மன்னர்களாயிருந்திருக்கிறார்கள். சிலர் ஏகபத்தினி விரதம் கொண்டு இராமபிரானைப் போல இருந்ததுண்டு. சிலர் பல தாரங்களை மணம் செய்து கொண்டு வீரப் புதல்வர்கள் பலரை ஈன்றதுண்டு. சிலர் சிவபக்தர்கள், சிலர் திருமாலின் பக்தர்கள்; சிலர் 'சாமியுமில்லை; பூதமுமில்லை' என்று சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்களில் யாரும் தங்கள் நடத்தையில் களங்கமுண்டாகுமாறு நடந்ததில்லை. பிறன் மனை விழைந்ததில்லை. குழந்தாய்! கன்னிப் பெண்களாயிருப்பவர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் மணந்து கொள். உன் பாட்டனின் தந்தை - புகழ் பெற்ற பராந்தகச் சக்கரவர்த்தி, ஏழு பெண்களை மணந்து கொண்டார், அவரைப் போல் நீயும் மணந்துகொள். ஆனால் பெரிய பழுவேட்டரையனை மணந்து கொண்ட மாயமோகினியைக் கண்ணெடுத்தும் பாராதே!"
"மன்னிக்க வேண்டும் தாத்தா! அந்த மாதிரி குற்றம் ஒன்றும் நான் செய்யமாட்டேன். சோழ குலத்துக்கும் மலையமான் குலத்துக்கும் களங்கம் உண்டு பண்ண மாட்டேன்!"
"அப்படியானால் அவள் அழைப்புக்காக ஏன் போகிறாய்? குழந்தாய்?"
"உண்மையை உங்களிடம் சொல்லிவிட்டே போகிறேன். அவளுக்கு ஒரு சமயம் நான் ஒரு பெரிய தீங்கு செய்தேன். அதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்" என்றான் கரிகாலன்.
"இது என்ன வார்த்தை? ஒரு பெண்ணிடம் நீ மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாவது? என் காதினால் கேட்கச் சகிக்க வில்லையே?" என்றார் மலையமான்.
ஆதித்த கரிகாலன் சிறிது நேரம் தலைகுனிந்த வண்ணமாக இருந்தான். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பாட்டனாரிடம் பழைய வரலாற்றை ஒருவாறு கூறினான். வீரபாண்டியனைத் தான் தேடிச் சென்று அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்ததையும், நந்தினி குறுக்கிட்டு உயிர்ப்பிச்சை கேட்டதையும், தான் அதைக் கேட்காமல் ஆத்திரப்பட்டு அவனைக் கொன்றதையும் அதுமுதல் தன் மனம் நிம்மதியில்லாமல் அலைப்புறுவதையும் பற்றி விவரமாகக் கூறினான்.
"அந்த ஞாபகம் என்னை ஓயாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. தாத்தா! அவளை ஒரு தடவை பார்த்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவளும் போனதையெல்லாம் மறந்துவிடத் தயாராகியிருப்பதாகக் காண்கிறது. இராஜ்யத்தில் குழப்பம் விளையாமல் பார்த்துக் கொள்வதிலும் சிரத்தைக் கொண்டிருக்கிறாள். அதற்காகவே என்னை அழைத்திருக்கிறாள். போகும் காரியத்தை முடித்துக் கொண்டு வெகு சீக்கிரமாகவே காஞ்சிக்குத் திரும்பி விடுவேன், தாத்தா! திரும்பி வந்ததும் என் தம்பியைக் கண்டு பிடித்துக் கொண்டு வருவதற்காகக் கப்பல் ஏறிப் புறப்படுவேன்" என்றான் ஆதித்த கரிகாலன்.
கிழவர் மலையமான் ஒரு பெருமூச்சுவிட்டு, "இதுவரையில் விளங்காமலிருந்த பல விஷயங்கள் இப்போது எனக்கு விளங்குகின்றன. இன்று வரை மர்மமாக இருந்த பல காரியங்கள் அர்த்தமாகின்றன. விதியை வெல்ல யாராலும் முடியாது என்பது நிச்சயந்தான்!" என்றார்.